ஒலிம்பிக்கே டார்கெட் விளையாட்டில் புது நம்பிக்கை அளிக்கும் பயிற்சியாளர்கள் நியமனம்

வரவிருக்கும் ஆண்டுகளில் நடைபெறும் முக்கியப் போட்டிகளில் இந்திய வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் பொருட்டு தங்களை தயார் செய்துகொள்ள, 398 பயிற்சியாளர்களை நியமித்துள்ளது இந்திய விளையாட்டு ஆணையம் (SAI).

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பஜ்ரங் லால் தாக்கர் உட்பட புதிய பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பயிற்சியாளர்களாக புகழ்பெற்ற முன்னாள் வீரர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற கிராப்லர் ஷில்பி மல்யுத்த உதவி பயிற்சியாளராகவும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஜின்சி பிலிப் தடகளப் பயிற்சியாளராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கம் வென்ற வீராங்கனை பிரணமிகா போரா, குத்துச்சண்டை பயிற்சியாளராகியுள்ளார். மொத்தம் 21 துறைகளில் 398 பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2024, 2028 ஒலிம்பிக் தொடர் மற்றும் முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்குத் தயாராகும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு வழங்கும் முயற்சியாக பயிற்சியாளர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இதுதொடர்பாக பேசுகையில், "சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற பல முன்னாள் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்று பதக்கம் வென்ற முன்னாள் வீரர்கள் பயிற்சி அளிக்கும்போது பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களின் மன வலிமை அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நியமனம் கூடுதல் கவனம் பெற காரணம், இந்தியாவில் இதுவரை கவனம்பெறதா நீர் விளையாட்டுகள் போன்ற பல புதிய விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் கிடைத்துள்ளனர். மொத்தம் உள்ள 398 பயிற்சியாளர்களில் நான்கு பேர் அர்ஜுனா விருது பெற்றவர்கள், தலா ஒரு தியான்சந்த் மற்றும் துரோணாச்சார்யா விருது பெற்றவர்களும் தேர்வாகி உள்ளனர். முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் விளையாட்டு பயிற்சி படிப்பை முடித்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்னர் பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் ஒப்பந்தம் முடிந்த பின்னும் அவர்களது தகுதிக்கு ஏற்ப மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாக இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய விளையாட்டு உலகில் இந்த பயிற்சியாளர்கள் நியமனம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவு முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர்களாக களமிறங்கியிருப்பது புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பல வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Google+ Linkedin Youtube