சிரிப்பு வாயு வைத்தியம்

நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை, சிரிப்பு வாயு என்பர். காரணம், இதை சிறிதளவு மூச்சில் கலந்தால், சிரிக்கும் படி துாண்டக்கூடிய தன்மை இதற்கு உண்டு.ஆய்வுக்கூடத்தின் நகைச்சுவையாக கருதப்பட்ட நைட்ரஸ் ஆக்சைடு, தற்போது மனச் சோர்வு, மனச் சுமை போன்ற உளவியல் நோய்களுக்கு நல்ல பலன் தருவதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள, வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மனச் சோர்வுக்கு சிகிச்சையில் தரப்படும் மாத்திரைகள், சில நோயாளிகளுக்குக் கேட்ப தில்லை. அத்தகைய 24 நோயாளிகளுக்கு ஒரு மணி நேரம் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை குறைந்த அடர்த்தியில், விஞ்ஞானிகள் சுவாசிக்கக் கொடுத்தனர். பின் அவர்களை கண்காணித்ததில், அடுத்த 14 நாட்கள் வரை அவர்கள் மனச் சோர்வின்றி இருக்க முடிந்தது தெரிய வந்தது.
இது உளவியல் மருத்துவ வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாத்திரைகள் பலன் தராத இடத்தில், 18ஆம் நுாற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட 'சிரிப்பு வாயு' நல்ல பலன் தருவதை பலராலும் நம்ப முடியவில்லை.மேலும், தற்கொலை எண்ணங்கள் கொண்ட தீவிர மனச்சோர்வு நோயாளிகளுக்கு, ஒரு மணி நேரத்தில், உளவியலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடிவது நிச்சயம் வரவேற்கத்தக்கதுதான்.
நைட்ரஸ் ஆக்சைடு வாயு சோதனையின்போது சிலருக்கு மட்டும் குமட்டல் போன்ற பக்கவிளைவுகள் இருந்தன.அடுத்தடுத்த ஆய்வுகளில் இக் குறைகள் போக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்

Google+ Linkedin Youtube