ஆக்சிஜன் இன்றி 24 பேர் உயிரிழந்த விவகாரம்; எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் -சித்தராமையா

ஆக்சிஜன் இன்றி 24 பேர் உயிரிழந்த விவகாரம்; எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் -சித்தராமையா

கர்நாடகாவில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் சாமராஜ நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 24 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இந்த 24 பேரில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடங்குவர். இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, கர்நாடகாவில் நோயாளிகள் 24 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், ''இது வெறும் மரணம் அல்ல. அரசால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை. இந்த மரணங்கள் பற்றி நீதிமன்ற விசாரணை வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். அரசு செய்த படுகொலைகளுக்காக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே. சுதாகர் பதவி விலக வேண்டும்.

சாமராஜநகர் மருத்துவமனையில் நடந்தது போல் மற்றொரு சம்பவம் நடக்க நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொருவருடைய வாழ்வும் விலைமதிப்பற்றது. மாநிலத்தில் அரசு நிா்வாகம் சீா்குலைந்துள்ளது. இதற்கு சாமராஜ்நகா் சம்பவம் சரியான உதாரணம். மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத, மாநில பாஜக அரசு இருப்பதை விட வெளியேறுவது தான் சரியானதாக இருக்கும். கடந்த பல நாள்களாக ஆக்சிஜன் குறைபாடு காரணமாக பலரும் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

சாமராஜநகர் மருத்துவமனை சம்பவத்திற்கு மாநில அரசு, மாவட்ட மருத்துவ அதிகாரிகள், மாவட்ட நிா்வாகம் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube