மேற்கு வங்க தேர்தல் முடிவுக்குபின் வன்முறை புகார்: மே 5-ல் பாஜக தர்ணா போராட்டம் அறிவிப்பு

மேற்கு வங்க தேர்தல் முடிவுக்குபின் வன்முறை புகார்: மே 5-ல் பாஜக தர்ணா போராட்டம் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த வன்முறைகளில் பாஜகவினர் 6 பேர் கொல்லப்பட்டதாக புகார் வெளியான நிலையில், இதனை கண்டித்து மே 5-ஆம் தேதி நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடைபெறும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்திருக்கிறார்.

மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிறன்று அறிவிக்கப்பட்டது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டது. முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது மாநிலத்தின் பல பகுதிகளில் தங்கள் மீது ஆளும் திரிணாமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இத்தாக்குதலில் தங்கள் கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் என 6 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனை கண்டித்து நாடு முழுவதும் பாஜக சார்பில், அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளையும் பின்பற்றி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. மேலும்  மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்காளத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

இந்த வன்முறை தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கிடையில் திரிணாமூல் தொண்டர்கள் அமைதி காக்கவேண்டும் என்றும் வன்முறையை தூண்ட வைக்கும் பாஜகவினரின் முயற்சிகளுக்கு பலியாகி விடக் கூடாது என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

Google+ Linkedin Youtube