ஐ.நா : 130 நாடுகள் ஒரு டோஸ் கரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை

சுமார் 75% கரோனா தடுப்பு மருந்துகள் வெறும் 10 நாடுகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன. இது நியாயமற்றது என்று ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆண்டோனியா குத்தரெஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து குத்தரெஸ் கூறும்போது, “சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை. வெறும் 10 நாடுகளுக்கு சுமார் 75% கரோனா தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது நியாயமற்றது. அனைத்து நாடுகளுக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் சென்றடைய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Google+ Linkedin Youtube