முடிவுக்கு வருகிறது ஃபார்ம்வில் விளையாட்டு: டிசம்பர் 31க்குப் பிறகு ஃபேஸ்புக்கில் இருக்காது

ஃபேஸ்புக் பயனர்களிடையே மிகப் பிரபலமாக இருந்து வந்த ஃபார்ம்வில் விளையாட்டு வருகிற டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கப்படவுள்ளது.

ஃபேஸ்புக் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வந்த சமயத்தில் கேண்டி க்ரஷ் போல பிரபலமான இன்னொரு எளிமையான விளையாட்டு ஃபார்ம்வில் (Farmville). விவசாயம் செய்து சம்பாதிப்பது தான் இந்த விளையாட்டின் எளிய அமைப்பு. பப்ஜி யுகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஃபார்ம்வில் பிடிக்காமல் போகலாம் ஆனால் ஃபார்ம்வில்லை உருவாக்கிய ஸிங்கா நிறுவனத்துக்கு அது மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது.

ஃப்ளாஷ் என்ற மென்பொருளின் உதவியுடன் செயல்பட்டு வரும் விளையாட்டுகளை இந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு தனது தளத்திலிருந்து நீக்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது. ஏனென்றால் அதே நாளில் தான் ஃப்ளாஷ் மென்பொருளை உருவாக்கிய அடோபி நிறுவனமே அத்தனை ப்ரவுசர்களிலிருந்து தங்களது மென்பொருளை நீக்குகிறது. இதனால் ஃபார்ம்வில் உள்ளிட்ட ஃப்ளாஷ் அடிப்படையில் வேலை செய்து வந்த விளையாட்டுகள் அதிகம் பாதிக்கப்படும்.

இது பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஸிங்கா நிறுவனம், "2009ல் ஆரம்பித்த 11 வருட அற்புதப் பயணத்தைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் ஃபார்ம்வில் விளையாட்டின் அசல் வடிவம் முடிவுக்கு வருகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்

ஃபார்ம்வில் 2: ட்ராபிக் எஸ்கேப், ஃபார்ம்வில் 2: கண்ட்ரீ எஸ்கேப் மற்றும் அடுத்து உலகளவில் மொபைல்களில் விளையாட வெளியாகவுள்ள ஃபார்ம்வில் 3 ஆகிய விளையாட்டுகளில் நீங்கள் இணைவீர்கள் என்று ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

இந்த ஆட்டத்தின் மூலம் நீங்கள் கிரெடிட்ஸ் சம்பாதித்து வைத்திருந்தால் அதை டிசம்பர் 31, 2020க்குள் பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த காலம் வரை இந்த ஆட்டத்தை இன்னும் சுவாரசியமாக்கப் பல புதிய அம்சங்களை விளையாட்டுக்குள் சேர்க்கவிருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

ஃபார்ம்வில் புகழின் உச்சியில் கிட்டத்தட்ட 30 கோடி பயனர்கள் ஒவ்வொரு நாளும் இதை விளையாடி வந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

Google+ Linkedin Youtube