கரோனா வைரஸ் பரவல் : 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை?

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இந்த வாரத்தில் ஆலோசனை நடத்துவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதி காணொலி மூலம் நடைபெறலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 7-ம் கட்டமாக ஆகஸ்ட் 31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் கரோனா வைரஸ் சூழல் பரவல் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இருப்பினும் பொருளதார சூழல் கருதி இதுவரை லாக்டவுனில் விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்திவிட்டது. ரயில், விமானப் போக்குவரத்து, திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள், பள்ளி, கல்லூரிகள் போன்றவை மட்டுமே முழுமையாக இயங்க அனுமதிக்கவில்லை.

இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19 லட்சம் பேர் புதிதாக நோய்தொற்றுக்கு ஆளாகினர்.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது. தற்போது நாட்டில் கரோனா வைரஸ் பரவல் 50 லட்சத்தையும் கடந்துள்ளது.

அதேசமயம், குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 42 லட்சமாக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய 10லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா வரைஸால் குறிப்பிட்ட 7 மாநிலங்களில் இருந்துதான் புதிதாக அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, அந்த 7 மாநில முதல்வர்களுடன் மட்டும் வரும் வாரத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம்,ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

கடைசியாக பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், பிஹார், குஜராத், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Google+ Linkedin Youtube