அமைதியாக இருப்பதால், பதில் இல்லை என அர்த்தமில்லை: மகாராஷ்டிரா மீது அவதூறு ஏற்படுத்த சதி நடக்கிறது: உத்தவ் தாக்கரே பேச்சு

மகாராஷ்டிரா மாநிலத்தின் மீது அவதூறு ஏற்படுத்தச் சதி நடந்து வருகிறது. பலவேவறு விஷயங்களில் நான் மவுனம் காப்பதால், பதில் இல்லை என அர்த்தம் இல்லை என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டிலேயே அதிகமாக கரோனாவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இதனால் எதிர்க்கட்சியான பாஜக கரோனா விவகாரத்தை மகாவிகாஸ் அகாதி அரசு முறையாக கையாளவில்லை எனக் குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கிடையே நடிகை கங்கனா ரணாவத்தும் மகாராஷ்டிரா அரசுக்கும், மும்பைக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து வருகிறார். இது ஆளும் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடியை அளித்துள்ளது.

இந்த சூழலில் தொலைக்காட்சி வாயிலாக முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில அரசு எடுத்துவரும் மிஷன் பிகின் அகெயின் பிரச்சாரத்தை பற்றி பேசி வருகிறார். மக்களுக்கு உத்தவ் தாக்கரே இன்று தொலைக்காட்சியில் உரையாற்றியதாவது:

எந்தவிதமான அரசியல் புயலாக இருந்தாலும் நான் எதிர்கொள்வேன். கரோனா வைரஸுக்கு எதிராகவும் போராடுவேன். கரோனா வைரஸ் பாதிப்பில் மாநிலம் 10 லட்சத்தைக் கடந்துள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அதேசமயம், மாநிலத்தில் ஆளும் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக நடக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடுவோம். அரசியல் ரீதியாக பதில் அளிக்க முதல்வருக்கு இருக்கும் முகக்கவசத்தை நான் நீக்குவேன். நான் இதுவரை மவுனம்காத்தமைக்கு, அர்த்தம் என்னிடம் பதில் இல்லை என்று இல்லை.

மகாராஷ்டிராவில் வெள்ளம், புயல், கரோனா அனைத்து பிரச்சினைகளையும் என்னுடைய அரசு சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அதோடு அரசியல் ரீதியான புயலையும் மக்களின் ஆதரவோடு சமாளிப்பேன்.
கரோனா தொற்று தற்போது கிராமங்களிலும் பரவத் தொடங்கிவிட்டது. அதேசமயம், கரோனாவிலிருந்து குணமடைந்துவருவதும் அதிகரித்துள்ளது. தொடக்கத்திலேயே கரோனாவைக் கண்டறிந்து

சிகிச்சையளித்தால், வேகமாக குணமடைய முடியும் என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
மக்கள் கரோனா வைரஸை எளிதாக எடுக்க வேண்டாம். முகக்கவசம் அணிந்து செல்லுங்கள், சமூக விலகலைக் கடைபிடியுங்கள். கூட்டமான இடங்களை தவிருங்கள், முடிந்தவரை நேருக்கு நேர் நின்று பேசுவதைத் தவிருங்கள்.

நாம் மெதுவாகவே மிஷன் பிகின் அகைன் திட்டத்தைத் தொடங்கினோம். ஆனால், சிலர் இந்த திட்டத்தில் அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். மகாராஷ்டிராவை அவமானப்படுத்தச் சதி நடக்கிறது.

நிசார்கா புயல், வெள்ளம் ஆகியவற்றின் போது மக்களுக்குத் தேவையான நலத்திட்டப் பணிகளை அரசு செய்திருக்கிறது. 29 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, அவர்களுக்கு ரூ.700 கோடி வழங்கப்பட்டுள்ளது. விதர்பா பகுதிக்கு உடனடியாக ரூ.18 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. அனைத்து சவால்களையும் சிறப்பாகவே அரசு கையாண்டு வருகிறது.

என்னுடைய குடும்பம், என்னுடைய பொறுப்பு என்ற வகையில் நம்முடைய பொறுப்புகளை கரோனா காலத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். மக்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் போர் வெற்றி பெறாது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் பரிசோதனை செய்வது அரசால் இயலாது.

கல்வி, வேலைவாய்ப்பி்ல மராத்திய மக்களுக்கு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது எதிர்பாராதது. கடந்த ஆண்டு சட்டப்பேரைவயில் ஒருமனதாக இந்த இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

மராத்திய அமைப்புகள் யாரும் இந்த விவகாரத்தில் போராட்டங்களை , ஆர்ப்பாட்டங்களை கரோனா காலத்தில் நடத்த வேண்டாம். மராத்திய மக்களுக்கு உரிய நீதியை பெற்றுத் தர அரசு தொடர்ந்து போராடும். இதற்கு பாஜகவும் முழுமையாக ஆதரவு அளிக்கும் என தேவேந்திர பட்நாவிஸும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube