திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் தாக்கல் செய்த மனு: திமுக தலைவர், பொதுச் செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

தன்னைக் கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து எம்எல்ஏ கு.க.செல்வம் தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, திமுக தலைவர், பொதுச் செயலாளருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தது, தமிழக பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றது போன்ற காரணங்களால், எம்எல்ஏ கு.க.செல்வத்தைக் கட்சியில் இருந்து நீக்கி, திமுக தலைமை, கடந்த மாதம் 13-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கு.க.செல்வம், சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று (செப். 10) வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், கட்சி சட்டத்திட்டத்தின்படி, உறுப்பினரைக் கட்சியில் இருந்து நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சி அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளித்தும், எந்த விசாரணையும் நடத்தாமல், தன்னைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கூடுதலாக லிப்ட் அமைக்க வேண்டும் என்பதற்காகவே, ரயில்வே அமைச்சரைச் சந்திக்கச் சென்றதாகக் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, பாஜகவில் இணைய வரவில்லை என்பதை விளக்கியிருந்ததாகவும், ஆனால் தன்னைக் கட்சியில் இருந்து நீக்கியதாகவும் மனுவில் கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த 17-வது உதவி நகர உரிமையியல் நீதிமன்றம், மனுவுக்கு செப்டம்பர் 18-ம் தேதிக்குள் பதிலளிக்க திமுக தலைவர், பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டது.

Google+ Linkedin Youtube