'சில்லுனு ஒரு காதல்' வெளியான அன்று மகிழ்ச்சியாக இல்லை: இயக்குநர் கிருஷ்ணா

'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் வெளியான அன்று மகிழ்ச்சியாக இல்லை என்று அந்தப் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

2006-ம் ஆண்டு வெளியாகி இளைஞர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படம் 'சில்லுனு ஒரு காதல்'. இப்போது வரை இந்தப் படத்தின் பாடல்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஞானவேல்ராஜா தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர். செப்டம்பர் 8-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூல் ரீதியில் கொண்டாடப்பட்டது.

நேற்றுடன் இந்தப் படம் வெளியாகி 14 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதனை சூர்யா ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் படம் தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்தார்கள். இதனால் #14yearsofSillunuOruKadhal என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டானது.

இதனிடையே இந்தக் கொண்டாட்டம் தொடர்பாக அப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"'சில்லுனு ஒரு காதல்' படத்துக்கு நீங்கள் காட்டும் அன்பு என்னை வாயடைக்க வைத்துவிட்டது. என் மனதிலிருந்து ஓர் உண்மையைச் சொல்கிறேன். இதே நாளில் 2006-ம் ஆண்டு நான் மகிழ்ச்சியாக இல்லை. ஏனென்றால் படத்தைப் பற்றிய கலவையான விமர்சனங்கள் வந்தன. சில முக்கிய விமர்சகர்கள் படத்தைக் குப்பை என்று சொல்லியிருந்தார்கள். அதனால் பெரிய தாக்கம் ஏற்பட்டது.

ரசிகர்கள் மெதுவாகத்தான் வர ஆரம்பித்தார்கள். படத்தின் இயக்குநராக நான் குற்றம் சாட்டப்பட்டேன். அது என் வாழ்க்கையில் என் மனநிலையைப் பெரிய அளவில் மாற்றியது. ஆனால், இன்று இந்தப் படம் பற்றி நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் பல திரைப்படங்களை, இன்னும் நம்பிக்கையுடன் உருவாக்க என்னை இது தூண்டுகிறது. மீண்டும், உங்கள் அனைவருக்கும் நன்றி".

இவ்வாறு கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube