திருமண மண்டபமாக மாறும் ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ: திரையுலகினர் அதிர்ச்சி

ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ திருமண மண்டபமாக மாறவுள்ளது என்ற தகவல் திரையுலகினர் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் நிலை எப்படியிருக்கும் என்று கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தொடங்கியதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. அதேவேளையில் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, சென்னையில் ஏவிஎம் ராஜேஸ்வரி, அகஸ்தியா உள்ளிட்ட திரையரங்குகள் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கெனவே, ஏவிஎம் வளாகத்தில் ஒரு பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பு, ஒரு பகுதி மருத்துவமனை என்று மாறிவிட்டது.

விரைவில் ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் இடிக்கப்படவுள்ளது. தற்போது ஏவிஎம் வளாகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏவிஎம் கார்டனும் திருமண மண்டபமாக மாறவுள்ளது. இந்த கார்டனில் டப்பிங் ஸ்டுடியோ தற்போது இயங்கி வருகிறது. அதற்கு முன்பாக பல வரவேற்பு பெற்ற படங்களின் படப்பிடிப்பு ஏவிஎம் கார்டனில் நடைபெற்றுள்ளது.

அந்த கார்டனில் உள்ளே செல்லும்போதே, அதில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள் நமது நினைவில் வரும். அந்த அளவுக்கு மிகவும் பிரபலமானது. அதேபோல், அங்கு இயங்கி வரும் டப்பிங் ஸ்டுடியோவில் கிட்டத்தட்ட தமிழ்த் திரையுலகின் அனைத்து நடிகர்களுமே டப்பிங் பேசியிருப்பார்கள். இந்நிலையில் ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ திருமண மண்டபமாக மாறவுள்ள தகவல், தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பலரும் ஹைதராபாத், வெளிநாடு, சென்னைக்கு வெளியே அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்புக்குத் திட்டமிடுவதால், இந்த கார்டனை திருமண மண்டபமாக மாற்றவுள்ளனர். இந்த கார்டனில் நடைபெற்ற கடைசிப் படப்பிடிப்பாக யோகி பாபு நடித்த 'மண்டேலா' படம் அமைந்திருக்கிறது.

விரைவில் திருமண மண்டபமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கவுள்ளன.

Google+ Linkedin Youtube