நோக்கியா 3310 மொபைலுக்கு வயசு 20: ட்விட்டரில் ரசிகர்கள் நினைவுப் பகிர்வு

மிகப் பிரபலமான நோக்கியா 3310 மாடல் மொபைல் அறிமுகமாகி இன்றோடு 20 வருடங்கள் ஆகின்றன. இந்த மொபைலின் ரசிகர்கள் பலரும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

செப்டம்பர் 1, 2000 அன்று நோக்கியா 3310 அறிமுகம் செய்யப்பட்டது. அடர் நீல நிறத்தில், பச்சை ஒளித் திரையில் இருந்த இந்த மொபைலில் ஸ்னேக் என்கிற விளையாட்டும் மிகப் பிரபலமானது. 2003-ம் ஆண்டு, மேலே சிறிய டார்ச்சுடன் கூடிய 1100 அறிமுகமானது. விற்பனைக்கு வந்த காலத்தில் அதிகம் விற்ற மின்னணு சாதனமாகவும் மாறியது. எந்த ஒரு போட்டியாளும் இல்லாத நோக்கியாவின் பொற்காலம் அது.

2016-ம் ஆண்டு, ஹெச்.எம்.டி க்ளோபல் என்கிற நிறுவனம், அடுத்த பத்து வருடங்களுக்கு நோக்கியா பிராண்ட் கருவிகளை விற்கும் உரிமத்தைப் பெற்றது.

பிரபல தொழில்நுட்ப வல்லுநரான வாலா அஃப்ஸர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நோக்கியா 3310 மிகச் சிறப்பாக விற்பனையானது. கிட்டத்தட்ட 12.6 கோடி மொபைல்கள் சர்வதேச அளவில் விற்பனையாகின. நோக்கியாவின் மறக்க முடியாத சாதனங்களில் ஒன்றானது. இன்றும் கூட இந்த மொபைலுக்குப் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நிலைத்து நிற்கக்கூடிய இதன் வலிமைக்காகப் பெயர் பெற்றுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இன்னும் பல பயனர்களும் நோக்கியா 3310-ஐ மறக்க முடியாது என்று பகிர்ந்துள்ளனர். அடிப்படை மொபைல் சாதனமான 3310-ல் எஸ்.எம்.எஸ், அழைப்புகள், கால்குலேட்டர் உள்ளிட்ட வசதிகள் இருந்தன. 2017-ம் ஆண்டு ரூ.3310 என்கிற விலையில் இந்தியச் சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வந்தது.

இம்முறை நான்கு வண்ணங்களில் வந்த இந்தக் கருவியில் இரண்டு சிம்கள் பொருத்தக்கூடிய வசதியும், மைக்ரோ எஸ்டி மெமரி கார்ட் பொருத்தக்கூடிய வசதியும், 2ஜி இணைய வசதியும் சேர்க்கப்பட்டிருந்தது. 1200 எம்ஏஹெச் பேட்டரியின் மூலம் 22 மணி நேரங்கள் பேச முடியும், ஒரு மாதம் வரை நீடித்து நிற்கும் என்றும் கூறப்பட்டது.

Google+ Linkedin Youtube