தூத்துக்குடியில் கரோனாவால் அரசு டாக்டர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த டாக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி போல்பேட்டை 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் கல்யாணராமன் (58). இவர் சாயர்புரம் அருகே பண்டாரவிளை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 28ஆம் தேதி இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அங்கு பரிசோதனை எடுக்கப்பட்டதில் இவருக்கு கரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோன்று தூத்துக்குடியை சேர்ந்த 82 வயது முதியவர், தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண், ஆண்டாள் தெருவை சேர்ந்த 77 வயது முதியவர் ஆகியோரும் கரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளனர். மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகி உள்ளனர்.  இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்து உள்ளது.
 
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 220 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 812 ஆக அதிகரித்து உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 494 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 275 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

Google+ Linkedin Youtube