ரஜினியின் தொலைபேசி உரையாடல் லீக்: 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் வருத்தம்

ரஜினியின் தொலைபேசி உரையாடல் லீக்கானது தொடர்பாக 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் வருத்தமடைந்துள்ளார்.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. பிப்ரவரி 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வயகாம் 18 நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது மட்டுமன்றி, பல்வேறு முன்னணி நடிகர்களும் இந்தப் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்தப் படத்தின் தொடக்கத்திலேயே ரஜினிக்கு நன்றி தெரிவித்திருப்பார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. அந்த அளவுக்குத் தீவிரமான ரஜினி ரசிகர்.

தற்போது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் தேசிங் பெரியசாமியை தொலைபேசி வாயிலாகப் பாராட்டியிருக்கிறார் ரஜினி. நேற்றிரவு (ஜூலை 30) ரஜினி - தேசிங் பெரியசாமி இருவருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் லீக்காகிவிட்டது. இது ட்விட்டர் தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

இது தொடர்பாக இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"வாழ்த்து தெரிவித்த எல்லாருமே "என்கிட்டயே தலைவர் பேசுனது மாதிரி அவ்வளவு சந்தோஷம்னு சொல்றாங்க". உங்களுடைய அன்புக்கு நன்றி. ஆனால், தனிப்பட்ட முறையில் போன் உரையாடல் லீக்கானதில் சந்தோஷம் இல்லை. ஏனென்றால் அது மிகவும் பெர்சனலான தொலைபேசி உரையாடல்.

ஆகையால் தான் எனது ட்வீட்டில் கூட நான் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக உரையாடல் வெளியாகிவிட்டது. எல்லாம் நன்மைக்கே. மீண்டும் உங்களுடைய அனைவரது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி"

இவ்வாறு தேசிங் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

    pic.twitter.com/uU8IZo53kD
    — Desingh Periyasamy (@desingh_dp) July 30, 2020

Google+ Linkedin Youtube