ஸ்பெயினில் இரண்டாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிப்பு

ஸ்பெயினில் இரண்டாவது நாளாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை தரப்பில், ''ஸ்பெயினில் கடந்த இரு தினங்களாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,789 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,443 பேர் பலியாகி உள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் சில பகுதிகளில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதாகவும், அங்கு செல்வதைத் தவிர்க்குமாறும் ஜெர்மனி அரசு தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டது.

ஸ்பெயினிலிருந்து வருபவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டன் அரசும் தெரிவித்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஸ்பெயினில் உள்ள சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்தது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென்கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.

உலகம் முழுவதும் 1.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

Google+ Linkedin Youtube