அமெரிக்க அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம்: ட்ரம்ப் திடீர் யோசனை

கரோனா சூழலில் அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க முடியும் வரை அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் 2-வது முறையாக அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக்கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இருவரும் தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் கரோனா வைரஸ் பரவும் காலத்தையும் பொருட்படுத்தாமல் காணொலி வாயிலாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த தேர்தல் குறித்து அரிசோனா, புளோரிடா, மிச்சிகன், வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் நடந்த கருத்துக்கணிப்புகளில் அதிபர் ட்ரம்ப் பின்தங்கியிருப்பதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

‘‘கரோனா தொற்றின் காரணமாக தபால் ஒட்டு முறை பயன்படுத்தப்பட்டால், அதன் காரணமாக தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரவும் வாய்ப்புள்ளது. அப்படி ஒரு தேர்தல் நடந்தால் அதுதான் வரலாற்றிலேயே மோசமான தேர்தலாக அமையும். அந்நிய நாடுகள் இந்த முறையின் காரணமாக தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புகள் அதிகம்.

அத்துடன் தபால் ஒட்டுமுறை இதற்கு முன்பு முயற்சி செய்யப்பட்ட இடங்களில் பெரும் கஷ்டமாக முடிந்துள்ளது. அப்படி நடந்தால் அமெரிக்காவிற்கும் அது மிக அவமானகரமானதாக அமையும்.

மக்கள் முறையாக, சரியாக மற்றும் பாதுகாப்பாக வாக்களிக்க முடியும் வரை அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்

Google+ Linkedin Youtube