சிவகுமார் குடும்பத்துப் படங்களை ஓடிடி தளத்திலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும்: ரோகிணி பன்னீர்செல்வம்

சிவகுமார் குடும்பத்துப் படங்களை ஓடிடி தளத்திலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்று ரோகிணி பன்னீர்செல்வம் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் 'பொன்மகள் வந்தாள்'. திரையரங்க வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்ட இந்தப் படம், கரோனா அச்சுறுத்தலால் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வெளியீடு விளம்பரம் வெளியானவுடன், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

"இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை" என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிக்கைகளும், பேட்டியும் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்கள் வெளியானதால், இந்தப் பிரச்சினை அப்படியே நீர்த்துப் போனது.

தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் மீண்டும் இது தொடர்பாக பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. "ஓடிடியில் வெளியிட்ட சிவகுமார் குடும்பத்துப் படங்களை வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்ததாகப் பேசப்படுகிறது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு ரோகிணி பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:

"ஓடிடியில் அவர்கள் படம் வெளியிட முடிவு எடுத்தபோது,எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் இப்படிச் செய்யும்போது நாங்கள் அதிலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்று தான் சொன்னோம். அப்போது கூட அவர்களுக்கு நாங்கள் திரையரங்குகள் கொடுக்க மாட்டோம் என்று சொல்லவில்லை. சிவகுமார் குடும்பத்துப் படங்களை அந்த ஓடிடி தளத்திலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும். இதுதான் எங்கள் நிலை"

இவ்வாறு ரோகிணி பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube