குதிரைப் பேர விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே ‘கிரிமினல்’ கட்சிகள்தான்: ஹெச்.டி. குமாரசாமி பாய்ச்சல்

ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதற்காக பாஜக குதிரைப்பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ இயக்கத்தை நாடு முழுதும் பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனத்தைத் தொடுத்துள்ளார்.

“ஆதரவு தரும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை ஆசைக்காட்டி இழுப்பதும் அவர்களுடன் இணைவது ஜனநாயக நடத்தையா? ராஜஸ்தானில் ஆட்சியமைக்க பிஎஸ்பி எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் பேரம் பேசி இழுக்கவில்லையா? இது மட்டும் குதிரைப் பேரம் ஆகாதா?

ஒத்த கொள்கை, மனநிலை உடைய கட்சிகளிலேயே பிளவு ஏற்படுத்துவது, கண்களுக்குத் தெரியவில்லையா?

அரசியல் கட்சிகளைப் பிளவு படுத்துவதில் காங்கிரஸ் கட்சி நிபுணத்துவம் வாய்ந்தது. குதிரைப் பேரம் என்ற வார்த்தை அரசியலில் வந்ததற்கே காங்கிரஸ் கட்சிதான் காரணம்.

இன்று எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குவதற்கு எதிராக பெரிய கூச்சல் போடும் காங்கிரஸ் முந்தைய காலங்களில் ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்களை வாங்கவில்லையா? ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி 8 ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்களை வாங்கிய கதை தெரியாதா என்ன? இப்படி எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே கிரிமினல் கட்சிகள்.

எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது எங்கள் எம்.எல்.ஏ.க்களை வாங்கவில்லை? 2018 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி சதி செய்யவில்லையா என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க காங்கிரஸுக்கு நேர்மையான தைரியம் இருக்கிறதா?

2004ல் காங்கிரஸ் கட்சி ஜேடிஎஸ் கட்சியை பிரிக்க நினைத்ததே. எங்கள் கட்சியை காங்கிரஸ் காலி செய்யாமல் இருப்பதற்காக நான் காங்கிரஸ் -ஜேடிஎஸ் கூட்டணியை உடைக்க வேண்டியிருந்ததே.” என்று கொதிப்பாகக் கேட்டுள்ளார் குமாரசாமி.

Google+ Linkedin Youtube