இந்தியாவில் மார்க்கெட்டை இழந்த சீன ஸ்மார்ட்போன்கள்

இந்திய எல்லையில் சீன ராணும் நடத்திய தாக்குதலால் சீனாவுக்கு எதிரான அதிர்வலைகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. சீனா என்ற வார்த்தையைக் கூடக் கேட்க விரும்பவில்லை என்று கூறும் அளவுக்கு சீனத் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக சீனாவைச் சேர்ந்த டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

சீன செயலிகளைப் போலவே சீன மொபைல் போன்களுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுமே என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து சீன ஸ்மார்ட்போன்களுக்கான தேவை இந்தியாவில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சீன ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது. கவுன்ட்டர் பாயிண்ட் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி, சீன பிராண்டுகளின் சந்தை மதிப்பு இந்தியாவில் 9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது சந்தை மதிப்பை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஜனவரி - மார்ச் காலாண்டில் சீன நிறுவனங்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவின் க்ஷியோமி நிறுவனம் 29 சதவீதம் சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. அதன் சந்தை மதிப்பு 1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

விவோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 17 சதவீதமாகவும், ரியல்மீ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11 சதவீதமாகவும், ஒப்போ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9 சத்வீதமாகவும் இருக்கிறது. 10 சதவீத வளர்ச்சி கண்ட சாம்சங் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 26 சதவீதமாக இருக்கிறது. ஆப்பிள் 1.3 சதவீதப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது.

Google+ Linkedin Youtube