ட்ரம்ப்பின் பதிவைக் கவனிக்காமல் விட்ட ஃபேஸ்புக்: ஸக்கர்பெர்கை சாடும் முன்னாள் ஊழியர்கள்

வன்முறையைத் தூக்கிப் பிடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பதிவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததற்காக ஃபேஸ்புக்கின் முன்னாள் ஊழியர்கள் பலர் அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கை சாடி அவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான, செல்வாக்குள்ள முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர்கள், இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதில் சிலர் ஃபேஸ்புக் சமூகத்துக்கான வழிகாட்டுதல்களை முதன்முதலில் உருவாக்கியவர்கள். அரசியல் பேச்சுகள் இப்படி கவனிக்கப்படாமல் போவது, ஃபேஸ்புக் பெருமை பேசும் அதன் கொள்கைகளுக்கே துரோகம் செய்வது போல என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட், காவல்துறை அதிகாரி ஒருவரால் கொலை செய்யப்பட்டார். பொது இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் மொபைலில் வீடியோவாகப் படம் பிடிக்கப்பட்டு வைரலானது. தொடர்ந்து அமெரிக்காவில் இனவாதத்துக்கு எதிரான பெரும் போராட்டம், தேசிய அளவில் வெடித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தும் என்கிற ரீதியில் எச்சரிக்கை விடுத்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவு வன்முறையைத் தூக்கிப் பிடிப்பதாகக் குறிப்பிட்டு பொதுநல அறிவிப்பு ஒன்றை ட்விட்டர் வெளியிட்டது. இதே பதிவு ஃபேஸ்புக்கிலும் பகிரப்பட்டது. ஆனால் இது ஃபேஸ்புக்கின் விதிகள் எதையும் மீறவில்லை என்று அதன் நிறுவனர் ஸக்கர்பெர்க் கூறினார். அதே வேளையில் இப்படியான மோசமானப் பதிவுகளைக் கையாளும் விதத்தை மாற்றுவதாகவும் அறிவித்தார்.

ஸக்கர்பெர்க் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போனதைக் கண்டித்து பல ஃபேஸ்புக் ஊழியர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து பலரும் ஸக்கர்பெர்க் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே தற்போது முன்னாள் ஊழியர்களின் கடிதமும் வெளியாகியுள்ளது.

"நமக்கு ஒரு விதி, அரசியல்வாதிக்கு வேறு விதி. மக்களை விட, அவர்களை ஆளும் அரசியல்வாதிகளுக்கு அதிக பொறுப்பு இருக்கும் வண்ணம் ஃபேஸ்புக் அவர்களை நடத்த வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்பது அரசியல் உரைகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதாகவே ஃபேஸ்புக் தலைமை புரிந்து வைத்திருக்கிறது.

அதிகாரமிக்கவர்களின் பேச்சுகள் தாக்கத்தை ஏற்படுத்துபவை என்பது எங்களுக்குத் தெரியும். அது விதிகளை நிறுவி, அதை அனுமதிக்க ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கி, வன்முறையை மறைமுகமாக அங்கீகரிக்கிறது. இவை அனைத்தும் தொழில்நுட்பத்தால் இன்னும் மோசாகப் பெருகுகின்றன" என்று அந்தக் கடிதத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம், ஸ்னாப்சாட் நிறுவனம், தனது செயலியில் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தை விளம்பரப்படுத்த மாட்டோம் என்று முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. ட்ரம்ப் இன்னமும் ஸ்னாப்சாட் செயலியை ட்விட்டர், ஃபேஸ்புக் அளவுக்குப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube