மேம்படுத்தப்பட்ட புதிய ரெனோ டஸ்ட்டர்

ரெனோ நிறுவனத்தின் துணை நிறுவனமான டேஸியா பிராண்டில் விற்பனை செய்யப்படும் டஸ்ட்டர் காருக்கு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்புதிய மாடல், இம்மாதம் நடைபெற உள்ள பிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே பேஸ்லிப்ட் மாடலாக வருவதால், புதிய டேஸியா டஸ்ட்டர் நீளம், அகலம், உயரத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. வலிமையான முகப்பு க்ரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அகலமான ஹெட்லைட், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்கு, 17 அங்குல அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. அலுமினிய ரூப் ரெயில்களும் வசீகரிக்கின்றன. வின்ட்ஸ்கிரீன் மற்றும் பின்புற கதவு அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, உட்புறத்தில் இடவசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. பானட் மற்றும் பெல்ட் லைன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தோற்றம் கூடுதல் பிரம்மாண்டத்தை பெற்றிருக்கிறது. முன்புறத்திலும், பின்புறத்திலும் கீறல் விழாத தன்மையுடன் ஸ்கிட் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. புதிய டேஸியா டஸ்ட்டரின் இன்ஜினில் மாற்றங்கள் இல்லை. 

வெளிநாடுகளில் ஏற்கனவே பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. இந்தியாவில் ரெனோ பிராண்டில் வரும்போது, தற்போது இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரும். பக்கவாட்டு பேனல்களில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால், வீல் ஆர்ச்சுகளில் அதிக மாற்றங்கள் இல்லை. பானட்டில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக பக்கவாட்டிலும் மிரட்டலாக இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இப்புதிய கார் வெளிவருவதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரெனோ நிறுவனத்தின் தாயகமான பிரான்ஸ் நாட்டிலும், தொடர்ந்து இங்கிலாந்திலும் இப்புதிய மாடல் விற்பனைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

Google+ Linkedin Youtube